உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

  • பிரிவுகள்!

  • பழையவை!

  • நாட்காட்டி!

    ஜூலை 2007
    தி செ பு வி வெ ஞா
    « ஜூன்   செப் »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • அண்மையில்....

  • சொல்லிச் சென்றவை...

    ராமலக்… மேல் என் குட்டி…
    Premkumar மேல் என் குட்டி…
    கலை மேல் பெண்கள் vs …
    சேவியர… மேல் பெண்கள் vs …
    சினேகி… மேல் என் குட்டி…

வெறும் கனவா?

பதிந்தவர் கலை மேல் ஜூலை 6, 2007

இது கனவா?

பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில்  நினைவிருக்கும் கனவை (அனேகமாக  கண்  விழிக்கும்போது  கண்டு  கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும்  சொல்லுவதும் வழக்கம். இப்போதெல்லாம் அப்படி சொல்வதை கூட விட்டு விட்டேன்.

மூன்று நாட்கள் முன்னால், வழக்கம்போல் லேட்டாக (லேட்டுக்கு காரணம் மகளுக்கும், கணவருக்கும் லீவு விட்டாச்சு) காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். லீவுதானே, மற்றவர்கள் நன்றாக தூங்கி எழும்பட்டும் என்ற நல்லெண்ணத்தில் (நான் எழுந்து போக வேண்டியிருக்கே என்று உள்ளுக்கு கொஞ்சம் எரிச்சல்தான்) சத்தம் அதிகம் போடாமல் தயாராகிக் கொண்டிருந்தேன்.

ஆனால் கணவரும் எழுந்து வந்தார். அவர் என்னிடம் கேட்டார் ”என்ன புதினம்?”. ’காலங்காத்தால இது என்ன கேள்வி’ என்று இந்தக்  கேள்வி ஆச்சரியத்தை தந்தாலும், அவசரமாய்  வேலைக்கு  புறப்பட  வேண்டி இருந்ததில்  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.   அதனால் நான் கடைசியாக கண்டிருந்த அன்றைய கனவை சொன்னேன். ஒரு பெரிய முதலையை எங்கள் வீட்டு குளியலறையில் கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறோம். அந்த முதலையின் வாயே குளியல் தொட்டியை விடப் பெரிது. அது எப்படி அந்த தொட்டிக்குள் இருக்கிறதென்பதெல்லாம் தெரியாது. :)

நான் கனவு சொல்லும்போது “வேறு வேலையில்லை.” என்று திட்டுபவர், பேசாமல் நான் சொன்ன கனவை கேட்டுவிட்டு, அவரும் ஒரு கனவு சொன்னார். அவர் கண்ட கனவில் ஒரு பாலத்தின் அருகில் கார் விபத்து நடந்ததாகவும், அந்த காரின் ஒரு பக்க சில்லுகள் இரண்டும் மேலே எழுந்து இருந்ததாகவும் சொன்னார். நான் கனவுகளையும், நிஜமான நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை என்றதால் அப்படியே அந்த கதையை விட்டு விட்டு சென்று விட்டேன்.

அன்று மாலை லண்டனில் இருக்கும் ஒரு தம்பிக்கு தொலைபேசினேன். அப்போது அவர்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமான விடயம். அன்று காலையில் அவருக்கு எனது கணவர் கனவில் கண்டது போன்ற அதே நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. அவர் high way யில் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி, இரு சில்லுகளும் மேலெழுந்து, பாதையின் ஒரு புறம் இருந்து மறு புறத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. நல்ல வேளையாக அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பொலீஸ் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்தார்களாம். வாகனம், முழுமையாக சரிந்து பாதையில் இழுபட்டுக் கொண்டு சென்றும்கூட, அவர்கள் உயிர் தப்பியிருப்பது மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விடயம் என்று சொன்னார்கள். அந்த விபத்தை நேரில் கண்ட அனைவரும் மிகவும் ஆச்சரியப் பட்டார்களாம். லண்டனில், அந்த high way யில், மிகப் பெரிய வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில் அப்படி ஒரு விபத்து நடந்தும், இவர்களது வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் அடித்துக் கொண்டு சேதப்படாமல், இவர்களும் உயிர் தப்பியது மிகவும் ஆச்சரியம் என்று பொலீஸ் உட்பட அனைவரும் சொன்னதாகச் சொன்னார்கள்.

இதில் என்னுடைய ஆச்சரியம், எப்படி அதே போன்ற கனவு, கிட்டத்தட்ட, அதே நேரத்தில் என் கணவருக்கு வந்தது என்பதுதான். எனது பாட்டியார் இறந்த ஒருநாள் அதிகாலையில், பல மைல் தொலைவில் இருந்து படித்து வந்த எனக்கு, நானே இறந்து போனதாகவும், என்னை சுற்றி பலர் நின்று அழுவதாகவும் நான் கண்ட கனவும் இப்போ நினைவுக்கு வருகின்றது. அன்று முழுவதும் நான் என்னவென்று புரியாத ஒரு மனக் கஷ்டத்தில் இருந்ததும், அன்று மாலை, பாட்டி இறந்த செய்தி என்னை வந்து சேர்ந்ததும் இப்போதும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.

I’m not a superstitious person. ஆனாலும் இந்த கனவுகளும், தொடர்ந்த நிகழ்வுகளும் ஆச்சரியமாக இருக்கின்றது.

கனவுகளைப்பற்றி பேசும்போது உங்களிடம் இன்னொரு கனவுபற்றியும்  சொல்லத் தோன்றுகின்றது. சோகக் கனவுபற்றி சொன்னதால், இனி ஒரு சந்தோஷக் கனவு. :)

உங்களில் யாராவது கனவில் பறந்ததுண்டா? நான் கனவுகளில் பறந்திருக்கின்றேன். யாராவது என்னை துரத்திக் கொண்டு வரும்போது, அவர்களிடமிருந்து தப்பிக்கவோ, அல்லது எனக்கு அவசரத் தேவையாக எங்கேயாவது விரைவாக செல்ல வேண்டும் என்று தோன்றும்போதோ நிலத்திலிருந்து மேலெழுந்து பறப்பேன். இறக்கை எதுவும் முளைத்திருக்காது :) . ஆனாலும் இலகுவாக பறக்க முடியும். அது கனவாகவே இருந்தாலும், மிகவும் அபூர்வமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன்.

ஆனால் இப்போ நீண்ட நாட்களாக அப்படி கனவு வரவில்லை. :(

ஒருவேளை எந்த ஆபத்தும் எனக்கு இல்லாததாய் உணர்கின்றேனோ? அல்லது எந்த அவசரமும் இப்போது இல்லையோ தெரியவில்லை. :)

மறுமொழி இடுக